
புத்தாண்டு தினமான இன்று பிசிசிஐ முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் லட்சுமணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், உலக கோப்பையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் டி20 மற்றும் டெஸ்ட் ஒரு நாள் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன்கள், இரண்டு பயிற்சியாளர்களை பயன்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் கருத்து கேட்கப்பட உள்ளது. இதில் ரோஹித் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க இருக்கிறார்.
குறிப்பாக வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் அணிக்கு திரும்புவது குறித்து ரோஹித் சர்மா இந்த கூட்டத்தில் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டி20 உலக கோப்பையில் முக்கிய ஆட்டத்தில் கே எல் ராகுல் சொதப்பியது ஏன் என்று குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.