நாக்பூரில் சதமடித்தது எப்படி- மனம் திறந்த ரோஹித் சர்மா!
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அபாரமாக சதமடித்த ரோஹித் சர்மா, அவரது பேட்டிங் உத்தியை தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான வார்னர், கவாஜா, ஸ்மித், லபுஷேன் ஆகியோரே அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் சதத்தின் மூலமாகவும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரது அரைசதங்கள் மூலமாகவும் 400 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் சர்மா மட்டும் ஏதோ வேறு பிட்ச்சில் பேட்டிங் விளையாடியது போன்று இருந்தது. இதன்மூலம் கேப்டனாக 3 ஃபார்மட்டிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
Trending
இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் முதல் இன்னிங்ஸை விட படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மொத்தமாகவே வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவருமே பேட்டிங் ஆட கஷ்டப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா மட்டும் பந்துவீச்சாளர் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக பேட்டிங் செய்து சதமடித்தார். இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஆடுகளங்களை பொறுத்தமட்டில் முறையான திட்டத்துடன் அதை சரியாக செயல்படுத்தி ஆட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஸ்கோர் செய்வது கடினம். பந்து நன்றாக திரும்பும் மும்பை ஆடுகளத்தில் பேட்டிங் ஆடி வளர்ந்தவன் நான்.
எனவே அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. வழக்கமான பாணியில் ஆடாமல் கால்களை நகர்த்தி ஆடவேண்டும். வித்தியாசமாக ஆடி எதிரணி பவுலர்கள் மீது அழுத்தம் போடவேண்டும். என்ன மாதிரியான வித்தியாசம் காட்டுவது என்பதை நமது பலத்திற்கேற்ப முடிவு செய்துகொள்ள வேண்டும். கால்நகர்த்தல்கள், ஸ்வீப் ஆடுவது, ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவது என எந்தமாதிரியாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now