
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி தற்சமயம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வியிலும் மாட்டியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் தோல்வியினால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஏனெனில் சமீப காலங்களில் அவர் ரன்களைச் சேர்க்க தடுமாறி வருகிறார். இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.