
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) வியாழக்கிழமை முதல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி தொடக்க வீரர் இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கிய நிலையில், ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கினார். ஆனால் இத்தொடரில் அவர் பெரிதளவில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் தொடக்க வீரர் இடத்தில் களமிறங்கிய கேஎல் ராகுல் மூன்றாம் வரிசையிலும், ஷுப்மன் கில் மிடில் ஆர்டரிலும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்ஸ்வி - ராகுல் தான் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.