
ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து ரோஹித் சர்மா ஒட்டுமொத்தமாக வெறும் 9 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு ஒரே அரைசதத்தை மட்டுமே பதிவுசெய்துள்ளார். இதனால் அவரின் பேட்டிங் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், ரோஹித் சர்மா ஒவ்வொரு போட்டியிலும் 20 - 30 ரன்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் அனுபவ வீரர் சட்டேஷ்வர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.