
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற முறையில் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு கவுதம் கம்பீர் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். தொடரை வென்று விட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் பணியை சரியாக முடியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ ராகுல் டிராவிட், வி வி எஸ் லட்சுமணன் செய்ததை எப்போதும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். 2001 ஆம் ஆண்டு இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில், லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி 376 ரன்கள் சேர்த்தார்கள். இதில் லக்ஷ்மன் மட்டும் 280 ரன்களை குவித்தார். டிராவிட் தனியாக 150 ரன்கள் அடித்தார். இந்திய அணி பாலோ ஆன் பெற்று இவ்வளோ பெரிய ஸ்கோரை சேர்த்தார்கள். இதன் மூலம் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியிடம் யுத்திகள் ரீதியாக பல பிரச்சினைகள் இருக்கிறது. எனினும் இந்த விஷயங்களை எல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றுமா என்று என்னால் யூகிக்க முடியாது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பி ஆஸ்திரேலிய அணி இருக்கிறது.