
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டியும், ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவனும் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரிவுடன் 8 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் கேஎல் ராகுல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 38 ரன்களையும், அக்ஸர் படேல் 31 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக, இந்தியாவின் இன்னிங்ஸ் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு 26 ஓவர்களில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஓவன், மேத்யூ குஹ்னெமன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.