
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 31) லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா லெவனில் இடம்பிடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இத்தொடரின் ஆரம்பத்திலேயே ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய பும்ராவுக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடிய நிலையில், ஐந்தாவது போட்டியிலும் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் அதிகரித்திருந்தது. இந்நிலையில் தான் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தற்சமயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.