
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளாகத் தொடரும் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்திய அணியும், 6-வது முறையாக உலகக் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.
இந்தநிலையில் இப்போட்டிக்கு முன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “உலகக்கோப்பை தொடரின் தொடக்க போட்டிகளில் முகமது ஷமியை பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய முடியவில்லை. ஆனால் சிராஜ் மற்றும் பும்ராவுடன் அவர் தொடர்ந்து உதவி செய்து வந்தார். அதேபோல் முகமது ஷமி பெஞ்ச் செய்யப்பட்ட போது, அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்று தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தோம்.
இதனால் முகமது ஷமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு வந்த போது, அவரின் ஆட்டத்தை அனைவருக்கும் காட்டியுள்ளார். அதேபோல் நாளைய போட்டிக்கான பிளேயிங் லெவனில் இன்னும் முடிவு செய்யவில்லை. பிட்சின் தன்மையை பார்த்துவிட்டு, எதிரணியின் பலம் மற்றும் பலவீனத்தை பொறுத்து வீரர்களை தேர்வு செய்வோம்.