
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஷாத்மான் இஸ்லாம் 24 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களிலும் என அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
வங்கதேச அணி தரப்பில் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதனையடுத்து நடைபெற இருந்த இப்போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் தொடர் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டியானாது மீண்டும் நடைபெறுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியது.