
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரது அபாரமான பேட்டிங்கின் மூலம், ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் ஆட்டத்தின் மூலமாகவும் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் இன்றைய தினம் ராஞ்சி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.