IND vs AUS, 2nd T20I: ரோஹித், தினேஷ் காட்டடி; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடந்துவருகிறது.
மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் இரண்டரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு தொடங்கப்பட்டது. அதனால் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது.
Trending
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு, பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் அடித்து ஆட, கேமரூன் க்ரீன் 5 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவரையும் அக்ஸர் படேல் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார்.
மறுமுனையில் 15 பந்தில் 31 ரன்களை விளாசியிருந்த கேப்டன் ஃபின்ச்சை பும்ரா க்ளீன் போல்டாக்கி அனுப்பினார். அக்ஸர் படேல், பும்ரா ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீச, 7 ஓவரில் 71 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி.
பின் ஹர்ஷல் படேல் வீசிய 8ஆவது ஓவரில் மேத்யூ வேட் 3 சிக்ஸர்களை விளாச, 8 ஓவரில் 90 ரன்களை குவித்து 91 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணைத்தது ஆஸ்திரேலிய அணி. இதில் அதிரடியாக விளையாடிய மேத்யூ வேட் 20 பந்தில் 43 ரன்களை விளாசினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரில் இருந்தே சிக்சர்கள் மூலம் எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். ஆனால் அவருக்கு துணையாக களமிறங்கிய கேஎல் ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களிலும், சூர்யக்குமார் யாதவ் ரன் ஏதுமின்றியும் ஆடாம் ஸாம்பா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் 9 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி 7 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் சிக்சர், பவுண்டரியை விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார்.
இதன்மூலம் 7.2 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா 20 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகள் என 46 ரன்களைச் சேர்த்திருந்தார்.
Win Big, Make Your Cricket Tales Now