பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், “இது இன்னொரு போட்டி என்று சொல்வது எளிது - ஆனால் நிச்சயமாக இது அப்படி இல்லை. இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் இப்போட்டியை மற்ற போட்டிகளைப் போலவே அணுக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தப் தொடரில் நாங்கள் நிறைய நல்ல விஷயங்களைச் செய்துள்ளோம். அதனால் இப்போட்டியிலும் அதனை பின்பற்று அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.