
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னிலும், ஷுப்மன் கில் 46 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அதன்பின் 56 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.