
12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியில் தொடக்க வீரர் எவின் லூயிஸ் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்திய நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை எடுத்த நிலையில் கைல் மேயர்ஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரைலீ ரூஸோவும் 20 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்து அதிரடி காட்டிய ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 93 ரன்களைக் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைக் குவித்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியிலும் தொடக்க வீரர் கேசி கார்டி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.