
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசிய பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் 15 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் பென் டக்கெட்டுடன் இணைந்த ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 4 பவுண்டரிகளுடன் 68 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஜோ ரூட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக்கும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டக்கெட் தனது சதத்தைப் பதிவுசெய்தார்.