
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடை அளிப்பதற்காக சிட்னி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கடைசி இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்து பெவிலியன் நோக்கி நடந்த போது, ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று மரியாதையை அளித்தது.
ஆஸ்திரேலியா அணிக்காக 112 போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்களையும் விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 சதங்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 22 சதங்களையும் விளாசியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை தன்னிடம் வைத்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளார். அதேபோல் உலகம் முழுவதும் நடக்கும் ஐபிஎல், ஐஎல்டி20, எஸ்ஏடி20, பிஎஸ்எல் என்று பல்வேறு லீக்குகளிலும் விளையாட தீவிரமாக உள்ளார். தற்போது 37 வயதாகும் டேவிட் வார்னர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு லீக் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று பார்க்கப்படுகிறது.