
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் ராகுல் டிராவிட் உலகளவில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர். பொதுவாக கிரிக்கெட்டில் இந்த இடம் அணிக்கு ஏற்படும் விக்கெட் சரிவுகளை நிறுத்தி அணியை காக்கின்ற பெரிய பொறுப்பு இருக்கின்ற இடமாகும்.
இவ்வளவு பொறுப்பு மிகுந்த இடத்தில் ராகுல் டிராவிட் சிவப்பு பந்து மட்டுமல்லாது வெள்ளை பந்திலும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டங்களை நிறைய தந்திருக்கிறார். அணியைச் சரிவில் இருந்து காக்கவும் சரிவு ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டும் அணியை மேலே கொண்டு வரவும் அவருக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது.
ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு அவர் சென்ற உடனேயே அவரைப் போலவே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சட்டேஷ்வர் புஜாரா கிடைத்தது இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்தான். ஆனால் ஒரே சின்ன வித்தியாசம் புஜாராவால் சிவப்பு பந்தில் மட்டுமே இந்தியா அணிக்கு பங்களிப்பை செய்ய முடிந்தது. அவரால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இப்படி இருந்த காரணத்தால் அவரால் நவீன கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட்டில் எதையுமே செய்ய முடியவில்லை.