
சர்வதேச கிரிக்கெட்டில் நடப்பு 2023ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு மறக்க முடியாத அடிகளை ஆஸ்திரேலியா கொடுத்தது. ஏனெனில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா உலகின் புதிய டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்தது.
அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் 240 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.
அந்த வகையில் 2003 உலகக் கோப்பை போலவே மீண்டும் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. இந்நிலையில் உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுப்பேன் என்று நம்புவதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.