
இந்தியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியில் புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த முடிவு இறுதியில் இந்தியாவிற்கு தோல்வியில்தான் முடிந்தது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 215 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். எஞ்சிய 3 பவுலர்கள் 10-க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக உம்ரான் மாலிக் 4 ஓவரில் 1 விக்கெட்டை எடுத்தாலும் 56 ரன்களை வாரி வழங்கினார்.
கடந்த வருட ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் அசத்தியதால் இந்த வருடம் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குறிப்பாக 157.0 கி.மீ வேகப்பந்தை வீசி 22 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய இந்திய பவுலராக சரித்திர சாதனை படைத்தார்.