
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷும் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் க்ரீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேமரூன் க்ரீன் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.