ENG vs IND, 1st ODI: ரோஹித் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஜேசன் ராயை 2வது ஓவரிலேயே, ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. அதே 2வது ஓவரின் கடைசி பந்திலேயே ஜோ ரூட்டையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார்.
Trending
இதையடுத்து களத்திற்கு வந்த இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னரான பென் ஸ்டோக்ஸை ஷமி டக் அவுட்டாக்கினார். ராய், ரூட், ஸ்டோக்ஸ் ஆகிய 3 முக்கியமான வீரர்களும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்கள். பேர்ஸ்டோவையும் வெறும் 7 ரன்னுக்கு பும்ரா வீழ்த்தினார். லியாம் லிவிங்ஸ்டோனையும் பும்ரா டக் அவுட்டாக்கினார்.
26 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறிய நிலையில், பட்லர் 30 ரன்களும், மொயின் அலி 14 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினர். ஓவர்டன் 8 ரன்னில் ஆட்டமிழக்க, 68 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.
பின்னர் 9வது விக்கெட்டுக்கு டேவிட் வில்லியும் கர்ஸும் இணைந்து 35 ரன்களை சேர்த்தனர். சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு, மீண்டும் தனது ஸ்பெல்லை தொடங்கிய பும்ரா, முதல் பந்திலேயே கர்ஸை வீழ்த்தி, தனது அடுத்த ஓவரில் டேவிட் வில்லியையும் 21 ரன்களுக்கு போல்டாக்கினார்.
இதையடுத்து 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 7.2 ஓவரில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷிகர் தவான் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார்.
மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா - ஷிகர் தவான் இணை தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் முறையில் ஐந்தாயிரம் ரன்களையும் கடந்து அசத்தியது.
இதன்மூலம் இந்திய அணி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 76 ரன்களுடனும், ஷிகர் தவான் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now