
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷர்தூல் தாக்கூருக்கு ஆறு ஓவர்கள் மட்டுமே வாய்ப்பு கொடுத்தது சரியான முடிவு அல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
லீட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் இப்போட்டியில் நான்கு நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், போட்டியின் முடிவானது இறுதிநாள் ஆட்டத்தை நோக்கி உள்ளது. இதில் கடைசி நாளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 350 ரன்கள் தேவை, அதே நேரத்தில் இந்திய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை என்ற நிலை உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் இரு அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் நான்காவது பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் உள்ளார். ஆனால் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் வெறும் 6 ஓவர்களை மட்டுமே வீசியதுடன் விக்கெட்டுகள் ஏதுமின்றி 38 ரன்களையும் கொடுத்திருந்தார். ஆனாலும் முதல் இன்னிங்ஸில், இந்திய கேப்டன் ஷுப்மான் கில் ஷர்துல் தாக்கூரை ஆறு ஓவர்கள் மட்டுமே பந்து வீசச் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் 20 ஓவர்கள் வீச வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், ஷர்தூல் தாக்கூருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை.