
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணி வீரர்களை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை லீட்ஸீன் ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் 20 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க உள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 143 இன்னிங்ஸ்களில் விளையாடி 3974 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.