லார்ட்ஸ் டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா போராட்டம் வீண்; இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியானது இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் அதிக பட்சமாக கேஎல் ராகுல் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்களையும், ரிஷப் பந்த் 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 74 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 40 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களையும், ஹாரி புரூக் 23 ரன்களையும், ஸாக் கிரௌலி 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 192 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் காரணமாக இந்திய அணிக்கு 193 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கியடைசி நாள் ஆட்டத்தை கேஎல் ராகுல் - ரிஷப் பந்த் இணை தொடர்ந்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 2 பவுண்டரிகளுடன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 6 பவுண்டரிகளுடன் 39 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ் ரெட்டி ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிதிஷ் ரெட்டி 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜஸ்பிரித் பும்ரா 54 பந்துகளை எதிர்கொண்ட எதிரணி பந்துவீச்சாளர்களை அழுதத்தில் தள்ளிய நிலையில் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார் இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் இந்திய அணி இலக்கை எட்டும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இறுதியில் முகமது சிராஜுன் ஜடேஜாவுடன் இணைந்து அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இதில் முகமது சிராஜ் 30 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அணியின் வெற்றிக்காக போராடிய ரவீந்திர ஜடேஜா 61 ரனக்ளைச் சேர்த்த நிலையிலும், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now