
இங்கிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-1 கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியானது அடுத்ததாக நவம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது. அதன் படி நியூசிலாந்து சென்றடைந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.