
சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகி, அதன்பின் இங்கிலாந்து அணியில் இணைந்ததுடன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த வீரர் ஈயான் மோர்கன். சர்வதேச கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்காக கிரிக்கெட் விளையாடிய வீரர்களும் இவரது பெயரும் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளார்.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் 2006ஆம் ஆண்டு அறிமுகமான ஈயான் மொர்கன் இதுநாள் வரை 16 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம் 3 அரைசதங்கள் என 700 ரன்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதம், 47 அரைசதங்கள் என 7701 ரன்களையும், 115 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 14 அரைசதங்களுடன் 2,458 ரன்களையும் சேர்த்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் 83 போட்டிகளில் விளையாடி 1,405 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேலும் கடந்த 2022ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஈயான் மோர்கன் அதன்பின் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களை கொண்ட தனது கனவு அணியை உருவாக்கியுள்ள ஈயன் மோர்கன் தனது அணியை அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியின் கேப்டனாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கை தேர்வு செய்துள்ளார்.