
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சென்சுரியன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்திய ஏ அணியுடன் டக்ஸ் ஓவல் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடியது.
தென் ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றதில்லை. இதனால் இம்முறை புதிய வரலாறு படைக்க இந்திய அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட் கேஎல் ராகுல் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பிங் செய்யவுள்ளார்.
ஆனாலும் 5 நாட்கள் நடைபெறக்கூடிய டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வது கேஎல் ராகுல் போன்ற பகுதி நேர விக்கெட் கீப்பர்களுக்கு அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்ஜ், கேட்ச் ஆகியவற்றை பிடிப்பதில் கீப்பர்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும் அது வெற்றியையே பறிக்கும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.