
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி சரித்திர வெற்றி பெற்று இருக்கிறது.இந்த தொடரில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆக இருக்கும் இங்கிலாந்து அணியை டெல்லியில் வைத்து வீழ்த்தி எல்லோருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஆஃப்கானிஸ்தான் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் உதவி உடன் 282 ரன்கள் 50 ஓவர்கள் முடிவில் எடுத்தது. இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இரண்டு ஓவர்களை மீதம் வைத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில், உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக வீழ்த்தியது.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இது முதல் வெற்றியாகும். ஒரே உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பெரிய அணியான பாகிஸ்தான் இரண்டையும் ஆஃப்கானிஸ்தான் வீழ்த்தி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக இருப்பதோடு, நடப்பு உலகக்கோப்பை தொடருக்கும் பெரிய சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.