
இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி டையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை மறுநாள் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி அறிவிப்பதற்கு முன்னதாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கும் படி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் அணியின் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியின் மூத்த வீரர்களை நிச்சயம் இத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் இருவரும் அணியில் இடம்பிடித்தனர்.