
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று(ஜனவரி 18) அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துகிறார். மேற்கொண்டு ஷுப்மன் கில் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யபடாதது பேசுபொருளாக மாறிவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே இரண்டரை மணி நேரம் நீடித்த சந்திப்பு ரசிகர்களை கொஞ்சம் அதிருப்தியடைய செய்தது.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தற்ப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் படி, இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் அணியின் துணைக்கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் இடங்களுக்கு மத்தியில் மட்டுமே இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறது.