
நாளை இந்தியா, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 9-13, 17-21 மற்றும் மார்ச் 1-5, 9-13 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்கவில்லை. மேலும், ஸ்ரேயஸ் ஐயரும் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. இதனால், இந்திய டெஸ்ட் அணியின் மிடில் வரிசையில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரிஷப் பந்த் இடம் இஷான் கிஷனுக்கு கிடைக்குமா? அல்லது கேஎஸ் பரத்துக்கு கிடைக்குமா? என்ற கேள்வியும் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, துணைக் கேப்டன் கேஎல் ராகுல் ஓபனராக களமிறங்க வாய்ப்புள்ளது என்பதால், முரட்டு பார்மில் இருக்கும் ஷுப்மன் கில் மிடில் வரிசையில் களமிறங்க வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது. இதோடு சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு துறையிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. தற்போதுவரை அஸ்வின், ஜடேஜா, ஷமி, சிராஜ் ஆகியோரின் இடம் உறுதியாகிவிட்டது. ஆனால், கடைசி இடத்திற்கு குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது.