
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டிருந்தது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி போட்டியானது நேற்று கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தலா 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்த ஆட்டம் நடைபெற்ற நிலையில், இதில் டஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பிரதமர் லெவன் அணிக்கு சாம் கொண்டாஸ் - மேத்யூ ரென்ஷா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ரென்ஷா 5 ரன்னிலும், குட்வின் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கொண்டாஸ் மற்றும் ஜேக் கிளைடன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கொண்டாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேக் கிளைடன் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒலிவியன் டேவிஸ், ஜேக் எட்வர்ட்ஸ், சாம் ஹார்ப்பர், ஐடன் ஓ கார்னர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.