
உலகக் கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் துவங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக, இந்த ஆண்டு மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கின்ற செய்தி அமைந்திருக்கிறது. அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களம் இறங்குவாரா? என்பது குறித்து நேற்று பேசியிருந்த தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தபொழுது, இன்னும் 36 மணி நேரம் இருக்கிறது எனவே அவர் விஷயத்தில் நாங்கள் இறுதி நேரத்தில்தான் முடிவு எடுப்போம் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்தக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சரியாவதற்கு ஏறக்குறைய ஒரு வாரமாவது ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் இன்னும் இரண்டு போட்டிகளை சேர்த்து தவற விட கூட வாய்ப்பு இருக்கிறது.