
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்தார். இதனையடுத்து அவர் இந்திய அணியில் இருந்து விலகி இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் திரண்டு மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். இதுகுறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் விடுதிரும்பிய அஸ்வின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன், என்னால் முடிந்தவரை விளையாட முயற்சித்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம். அஸ்வின் என்ற கிரிக்கெட் வீரர் முடிந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை, இந்திய கிரிக்கெட்டில் இருந்து வேண்டுமானால் அஸ்வின் விலகியுள்ளார். அதற்காக கிரிக்கெட்டை விட்டு விலகிவிட்டார் என்று அர்த்தமில்லை, அவ்வளவுதான்.