
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் உலகின் டாப் 2 அணிகள் மோதுவதால் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து தொடர்ச்சியாக எதிரணிகளை தோற்கடித்து வெற்றி கண்டு வருகிறது. எனவே அந்த அதிரடியான அணுகுமுறையை பயன்படுத்தி 2012இல் வென்றதைப் போல இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்கும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.
மறுபுறம் அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்திடம் கடைசியாக 2012இல் தோற்ற இந்தியா அதன் பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா தங்களுடைய வெற்றி நடையை தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.