
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை பயணத்தை தொடங்கி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாகவும் இரட்டை வேகத்திலும் இருந்ததை இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்தி ஆஸ்ரேலிய அணியை சுருட்டினார்கள்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி இரண்டு ரன் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டை இழந்து, ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை கோட்டை விட்டது போல் இருந்தது. இதற்கு அடுத்து விராட் கோலி தந்த ஒரு எளிய கேட்ச்சை மார்ஸ் தவற விட்டார். இதன் காரணமாக போட்டியை பார்த்த அனைவருமே பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளானார்கள்.
இறுதியாக விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் சேர்ந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெல்ல வைத்தார்கள். இதில், கேஎல் ராகுல் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் எடுத்து அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.