
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்றனர். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காணொளியையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கி கௌரவித்தார்.
இதனையடுத்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வீரர்களுக்கும் உற்சாக வரவேற்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் வெற்றிக்கு பின் முதல்முறையாக சொந்த ஊரான வதோதராவுக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி திறந்தவெளி பேருந்தில் வலம் வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி வரவேற்பளித்தனர்.