
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்மன்பிரித் கவர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற சூழலில் இரு அணிகளும் களமிறங்கினர்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி நாட் ஸ்கைவரின் அரைசதம் மற்றும் எமி ஜோன்ஸ் 40 ரன்கள் சேர்த்ததின் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரேனுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை போராடிய ரிச்சா கோஷ் 44 ரன்களைச் சேர்த்த நிலையிலும், இந்திய அணியால் 20 ஓவர்களில் 140 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.