
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரானது சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதேபோல் இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மகளிருக்கான டி20 தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி முதலிடத்திலும், தஹிலா மெஹ்ராத் இரண்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேபோல் இந்திய அணியைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா 5ஆம் இடத்தில் நீடிக்கிறார். அதேசமயம் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்திற்கும், ஷஃபாலி வெர்மா இரண்டு இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், சாரா கிளென் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மூன்றாம் இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ரேனுகா சிங் 11ஆம் இடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் மற்றொரு இந்திய வீராங்கனையான ராதா யாத்வ் 8 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.