
சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முன்னேறின. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்க ஷஃபாலி வர்மா 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய ரிச்சா கோஷ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பூஜா வஸ்திரேகர், அமஞ்ஜோத் கவுர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்தது.