உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜேசன் ராய் நீக்கம், ஹாரி ப்ரூக் சேர்ப்பு!
உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய்க்கு பதிலாக, மோசமான ஃபார்மில் உள்ள ஹாரி ப்ரூக்கிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் தொடரை நடத்தும் இந்தியாவோடு, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் 45 லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளன.
இதனிடையே, செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தங்களது சார்பில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள, 15 பேரின் விவரங்களை உறுதி செய்ய வேண்டும். அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள தங்களது வீரர்களின் விவரங்களை வெளியிட்டுவிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்தும் உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணி விவரங்களை வெளியிட்டுள்ளது.
Trending
ஜோஸ் பட்லர் தலைமயிலான அணியில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஏற்கனவே அறிவித்தபடி, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பை தொடருக்காக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். முதுகு வலி காரணமாக அவதிப்படும் ஜேசன் ராய்க்கு பதிலாக ஹாரி ப்ரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ப்ரூக்கின் சராசரி வெறும் 12 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசிய டேவிட் மாலனும் அணியில் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சரும் அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் இருந்த ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் நடப்பாண்டு தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை, பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி, அகமதாபாத்தில் தொடங்கும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி வீரர்கள்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.
Win Big, Make Your Cricket Tales Now