All Time IPL XI: முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன்; தோனிக்கு கேப்டன் பொறுப்பு!
ஐபிஎல் ஆல்டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு, அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வுசெய்துள்ளனர்.
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து 17ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி வரும் மார்ச் மாதம் இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
மேலும் நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெறவுள்ளதால், அத்தொடருக்கு முன்னதாக வீரர்கள் தங்களது திறனை நிரூபிப்பதற்கான இடமாக நடப்பு ஐபிஎல் தொடர் இருக்கவுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களைக் கொண்ட டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐயும் தெரிவித்துள்ளது.
Trending
இந்நிலையில் மேத்யூ ஹைடன், டேல் ஸ்டெயின், வாசிம் அக்ரம் மற்றும் டாம் மூடி ஆகியோர் அடங்கிய முன்னாள் வீரர்கள் ஐபிஎல் தொடரின் ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளனர். அவர்ள் தேர்வு செய்த இந்த அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன், இரண்டு ஆல்-ரவுண்டர்கள் (ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர்), ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
அதன்படி இந்த அணியின் தொடக்க வீரர்களாக ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்ற டேவிட் வார்னரும் இடம்பிடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரின் நாயகர்களாக போற்றப்படும் ஆர்சிபி அணியின் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் 3 மற்றும் 4ஆம் இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல எம்எஸ் தோனி, சின்ன தல சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் இந்த ஆல் டைம் லெவன் அணியின் கேப்டனாகவும் எம்எஸ் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்பின் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவும், சிஎஸ்கேவின் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணியின் சுழற்பந்து வீச்சாளராக குஜராத் அணியின் ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அதேசமயம் இந்த அணியின் இம்பேக்ட் வீரர்களாக கிறிஸ் கெயில், ஆண்ட்ரே ரஸல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திரா சஹால் ஆகியோரது பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆல்டைம் ஐபிஎல் லெவன்: டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா..
இம்பேக்ட் வீரர்கள்: கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரசல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்.
Win Big, Make Your Cricket Tales Now