
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3ஆவது போட்டியில் தோல்வியை சந்தித்ததால் கடைசி போட்டியில் வென்றால் தான் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்பெற தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்ன்கள் திண்டாடிய வேளையில் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா மட்டும் 2வது இன்னிங்ஸில் நங்கூரமாக நின்று 59 ரன்கள் எடுத்து முடிந்தளவுக்கு போராடி அவுட்டானார்.
பொதுவாகவே நிதானம், பொறுமை, திறமை இவை அனைத்தும் சோதிக்கும் இடமே டெஸ்ட் கிரிக்கெட்டாகும். அதற்கு 100% பொருந்தக்கூடிய ஒரு வீரர் புஜாரா என்றால் மிகையாகாது. ஏனெனில் களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை தேடி கொடுக்கும் ஸ்டைலை கொண்ட அவர் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார்.