
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை (அக்டோபர் 16) முதல் தொடங்குகிறது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன,
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஜஸ்பிரித் பும்ரா நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவருடன் நானும் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர் விளையாட்டை நன்றாக புரிந்துகொள்கிறார். அவரிடம் பேசும் போது அவர் ஆட்டத்தை நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்றவாரு செயல்படுவார். மேலும் அவர் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்படாததால், அது குறித்து என்னால் அதிகம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார்.