
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் ராகுல் டிராவிட். தற்போது, 51 வயதாகும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் இளம் வீரர்களை உருவாக்கி வருவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரின் பயிற்சியின் கீழ் யு19 உலகக்கோப்பை தொடரை பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
இதன்பின் 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருப்பதால், அதே கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதனிடையே ராகுல் டிராவிட்டின் மகன் சமித் கிரிக்கெட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார். அண்மையில் முடிந்த கூர் பிகார் கோப்பை தொடரில் கர்நாடகா அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில் சமித் டிராவிட் முக்கிய பங்காற்றியுள்ளார். 7 போட்டிகளில் விளையாடி அவர் 3 அரைசதம் உட்பட 370 ரன்களையும், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.