
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஏனெனில், டி 20 உலகக் கோப்பையின் அறிமுக தொடரான 2007ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அதன் பின்னர் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. அதேசமயம் ஐசிசி தொடர்களில் இதுநாள் வரை இறுதிப்போட்டியில் விளையாடிய அனுபவமில்லாத தென் ஆப்பிரிக்க அணி இம்முறை மிகுந்த நம்பிக்கையுடனும், ஏராளமான கனவுகளுடனும் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. இதனையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சக அணி வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.