
ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதற்கு முன்னர் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் விளையாடும் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.