
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களின் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் நவீன கிரிக்கெட்டின் நாயகர்களாக செயல்பட்டு வரும் அவர்கள் கடைசியாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்தார்கள்.
இந்நிலைமையில் தற்போது மீண்டும் தேர்வாகியுள்ள அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதும் உறுதியாகியுள்ளது. முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு விராட் கோலியை தவிர்த்து ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக இருந்தது.
அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை களமிறக்குவதற்காக சமீபத்திய தொடர்களில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் இந்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வாருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.