
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது. அதனால் 1992 முதல் இதுவரை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரில் தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டேவிட் பெட்டிங்ஹாம் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 7 பவுண்டரி 2 சிக்சருடன் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து 56 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவின் வெற்றியில் பங்காற்றினார்.
கடந்த 2016இல் கார் விபத்தில் மிகப்பெரிய காயத்தை சந்தித்த காரணத்தால் பின்தங்கிய அவர் அதற்காக மனம் தளராமல் மீண்டும் குணமடைந்து முதல் தர கிரிக்கெட்டில் 89 போட்டிகளில் 6,000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக தற்போது 29 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாட அறிமுகமாகியுள்ள அவர் இந்திய ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தமக்கு பிடித்த வீரர்கள் என்று கூறியுள்ளார்.